தேர்தலுக்கு தயாராகி வருகிறது பீகார். இதற்கு முன் நடந்த தேர்தல்களை போல இல்லாமல் இந்த முறை பீகார் அரசியல் கட்சிகள் பிளந்து களத்தில் நிற்கின்றன. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் இன்னொரு அரசியல் புயல் ஒன்று உருவாகியுள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்வுக்கு முன்னாள் எம்எல்ஏவான சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யாராயுடன் கடந்த 2018ல் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஐந்து மாதத்தில் தேஜ் பிரதாப்புடன் வாழ மறுத்த ஐஸ்வர்யா, தாய் வீட்டுக்கு சென்றதுடன் விவகாரத்துக்கும் விண்ணப்பித்தார்.
அப்போதில் இருந்தே லாலு குடும்பத்துக்கும், ஐஸ்வர்யா குடும்பத்துக்கும் தொடர் மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த குடும்ப மோதல் இப்போது அரசியல் மோதலாக மாறியுள்ளது. ஆறு முறை எம்எல்ஏவாக இருந்த ஐஸ்வர்யாவின் தாய் சந்திரிகா ராய், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியில் இணைந்து அதிர்ச்சி கொடுத்தார். இவர் சேர்ந்தது மட்டுமில்லை ஐஸ்வார்யாவையும் ஜேடியூவில் சேர்த்து வரும் தேர்தலில் போட்டியிட வைக்க உள்ளார் சந்திரிகா ராய்.
அதுவும், கணவர் தேஜ் பிரதாப்பை எதிர்த்தே ஐஸ்வர்யா போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. கணவரை மட்டுமல்ல, கணவரின் தம்பி தேஜஸ்வீ பிரசாத் யாதவையும் எதிர்த்து இரண்டாவது தொகுதியாக ரகோபூர் தொகுதியிலும் ஐஸ்வர்யா போட்டியிட உள்ளார். இதற்கு நிதிஷ் குமாரும் பச்சை கொடி காட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் ஐஸ்வர்யாவின் இந்த நடவடிக்கையை முன்பே எதிர்பார்த்திருந்த தேஜஸ்வி யாதவ், ஐஸ்வர்யாவை எதிர்க்க, அவரது மாமா மகள் கரிஷ்மாவை தங்கள் கட்சியில் இணைத்து அதிரடி காட்டியுள்ளார். அவரை ஐஸ்வர்யா போட்டியிடும் தொகுதியில் களமிறக்கும் ஆலோசனையிலும் தேஜஸ்வி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வருகிற தேர்தலில் பீகாரில் வலுவான அரசியல் ஆட்டம் இருக்கின்றது.