இந்தி தெரியாத தமிழக மருத்துவர்களை அவமதித்த மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா அவமதித்துள்ளார்; அதிகார மமதையிலான இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது.
இந்தியாவின் அனைத்து மாநில அரசுத்துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 400 மருத்துவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர். தொடக்கத்திலிருந்தே பயிற்சியாளர்கள் இந்தி மொழியில் மட்டுமே வகுப்புகளை நடத்தினார்கள். இந்தியில் வகுப்புகளை நடத்துவது தங்களுக்குப் புரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் நடத்தும்படி தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு இணைய வழியில் தகவல் அனுப்பினர். ஆனால், அவற்றுக்கு எந்தப் பயனும் இல்லை. மூன்றாவது நாள் வகுப்பை அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா நடத்தியுள்ளார். அவரும் முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே வகுப்பை நடத்தியுள்ளார். ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்கவில்லை.
அதுமட்டுமின்றி, தமக்கு சரளமாக ஆங்கிலம் பேச வராது என்றும், அதனால் இந்தியில் மட்டும் தான் வகுப்பு நடத்த முடியும் என்றும் கூறியுள்ளார். இந்தி புரியாதவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறலாம் என்று செருக்குடன் கூறியுள்ளார். தமிழக மருத்துவர்கள் மீண்டும் ஒரு முறை கோரிக்கை விடுத்தபோது, ஆத்திரமடைந்த கொடேச்சா,எவருக்கேனும் இந்தி புரியவில்லை என்றால், அவர்களுக்கு நாம் புரியவைக்க வேண்டும். இந்தி புரியாதவர்கள் தொடர்ந்து பிரச்சினை செய்தால் அவர்கள் மீது தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியுள்ளார்.
அதை உறுதி செய்யும் வகையில் ஆயுஷ் அமைச்சக ஆலோசகரான பாலு மோடே என்பவர் தமிழகத்திலிருந்து பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆங்கிலத்தில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று கேட்டவர்களைப் பற்றி விசாரித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதே கொடுமை ஆந்திரம், தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்களுக்கும் நடந்துள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளரின் நடவடிக்கைகள் அதிகார அத்துமீறலின் உச்சக்கட்டமாகும். மத்திய அரசில் பதவி வகிப்பவர்கள் அவர்களுக்கு தெரிந்த இந்தி மொழியில் மட்டும்தான் வகுப்புகளை நடத்துவார்கள்; அந்த மொழி தெரியாதவர்கள் அதை எதிர்த்து கேள்வி கூட கேட்கக் கூடாது என்பது ஆதிக்க மனநிலை ஆகும். இந்தி பேசுபவர்கள்தான் இந்தியாவின் எஜமானர்கள் போலவும், இந்தி தெரியாத தமிழ் உள்ளிட்ட தென்மாநில மொழிகளைப் பேசுபவர்கள் கொத்தடிமைகள் போலவும் மத்திய அரசின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் நினைத்துக் கொள்வது ஆபத்தானது; ஜனநாயகப் பண்பற்றது.
இந்தியாவின் அலுவல் மொழி இந்தியாக இருந்தாலும் கூட ஆங்கிலம்தான் இணைப்பு மொழி ஆகும். இந்தி பேசாத மாநிலங்களுடனான தகவல் தொடர்புக்கு ஆங்கிலம்தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், தலைமைச் செயலாளர் நிலையிலான மத்திய அரசின் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் தமக்கு ஆங்கிலம் தெரியவில்லை; அதனால் இந்தியில் தான் பேசுவேன் என்று கூறியது அவரது ஆணவத்தை மட்டுமல்ல, அவர் அந்தப் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்பதையும் வெளிப்படுத்தி உள்ளது.
ஆயுஷ் அமைச்சக செயலாளர் பதவியில் ஆங்கிலம் தெரியாத கொடேச்சாவுக்குப் பதில், ஆங்கிலம் பேசத் தெரியாத தமிழ் அதிகாரி ஒருவர் இருந்து, தம்மால் தமிழில் மட்டும் தான் பாடம் நடத்த முடியும் என்று கூறியிருந்தால், அதற்கு இந்தி பேசும் மாநில அரசுகளிடமிருந்து எத்தகைய எதிர்வினைகள் வந்திருக்கும்? அந்த அதிகாரியின் நிலைமை என்னவாகியிருக்கும்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு நாட்டிற்குள் இருந்தாலும் இந்திக்கும், தமிழுக்கும் இந்த அளவுகளில் தான் மரியாதை கிடைக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்.
ஆயுஷ் பயிற்சி முகாமில் இந்தியைத் திணித்து, தமிழக மருத்துவர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும்