ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர் சேத்தன் சவுகான். 72 வயதான இவர் உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் ராணுவ வீரர்கள் நலம், ஊர்க்காவல் படை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் கடந்த 16 ம் தேதி குருகிராம் மருத்துவமனையில் வைத்து சேத்தன் சவுகான் திடீரென மரணமடைந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சேத்தன் சவுகானின் மரணத்திற்கு கொரோனா காரணமல்ல என்றும், அரசு மருத்துவமனையில் மோசமான சிகிச்சை அளிக்கப்பட்டது தான் அவரது மரணத்திற்குக் காரணம் என்றும் உத்தரப் பிரதேச மாநில சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், எம்எல்சியுமான சுனில் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: சேத்தன் சவுகான் பொதுவாகவே மிகவும் எளிமையானவர். முதலில் அவர் உத்தரப் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த மருத்துவமனையில் தான் நானும் சிகிச்சை பெற்று வந்தேன். அங்கு சவுகானுக்கு மிக மோசமான அனுபவங்கள் ஏற்பட்டன. அவர் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்றோ, ஒரு மாநில அமைச்சர் என்றோ கூட அங்கிருந்த மருத்துவர்களுக்குத் தெரியவில்லை. ஒருநாள் மருத்துவர்கள் ரவுண்ட்ஸ் வரும்போது நாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு ஒரு மருத்துவரும், சில நர்சுகளும் வந்தனர். யார் இங்கு சேத்தன் என்று ஒரு டாக்டர் சத்தமாகக் கேட்டார். அப்போது அவர் மிகவும் பவ்யமாக நான்தான் என்று கையை உயர்த்தி கூறினார். கொரோனா வைரஸ் எப்போது பாதித்தது என்று அவரிடம் மருத்துவர் கேட்டார். அதற்கு அவர் உரிய விளக்கம் அளித்தார்.
அப்போது மருத்துவருடன் வந்த ஒருவர், ' நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்' என்று கேட்டார். அப்போதும் அவர் எந்த கோபமும் படாமல், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பதாகக் கூறினார். ஒரு அமைச்சரிடம் மருத்துவர்கள் நடந்துகொண்ட விதம் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே நான் ஆவேசம் அடைந்து 'இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய முன்னணி வீரர் ஒருவர் தான் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று நான் கூறினேன். அப்போது, 'அவர் தான் இந்த சேத்தனா'? என்று மிகவும் அலட்சியமாக அந்த மருத்துவர் கேட்டார். இதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. இதன் பின்னர் தான் அந்த மருத்துவமனையில் இருந்து அவர் குருகிராம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சஞ்சய் காந்தி மருத்துவமனையில் மோசமான சிகிச்சை அளிக்கப்பட்டது தான் சேத்தன் சவுகானின் மரணத்திற்குக் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு சுனில் சிங் கூறினார். இவரது இந்த கருத்து உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.