உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கும் கனா பட இயக்குனர்.. இந்தியில் பரபரப்பை ஏற்படுத்திய படம் தமிழில் ரீமேக் ஆகிறது..

Udayanithi Stalin - Arunraja Kamaraj Join hands for Article 15 Remake

by Chandru, Aug 23, 2020, 14:10 PM IST

இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்துக் கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன. குறிப்பாகத் தமிழில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களை ஹிந்தியில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்றவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர். சமீபமாக அவர் ஹிந்தியில் வெற்றி பெற்ற படங்களைத் தமிழில் மொழி மாற்றம் செய்து அதில் இங்கு இருக்கும் நடிகர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைப் பணி புரிய வைத்து ஊக்குவித்து வருகிறார்.

கடந்த வருடம் அமிதாப்பச்சன் நடித்த "பிங்க்" திரைப்படத்தைத் தமிழில் அஜித் குமார் நடிப்பில் "நேர்கொண்ட பார்வை" படத்தைத் தயாரித்து , பெரும் வெற்றியைப் பெற்று அதன் மூலம் தமிழ்த் திரை உலகில் தன் வருகையைப் பதிவாக்கிக் கொண்டார். அதைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் , எச் வினோத் இயக்கத்தில் 'வலிமை" என்கிற தலைப்பில் நேரடி தமிழ்ப் படம் ஒன்றும் தயாரித்து வருகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து போனி கபூர் ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற "ஆர்டிக்கல் 15" படத்தையும் தமிழில் வழங்க உள்ளார். பல்வேறு படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தன் நெருக்கத்தை வெளிப்படுத்தி உள்ள உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க ,"கனா' படம் மூலம் தேசம் முழுக்க தன் வருகையைப் பதிவு செய்த , தமிழ்த் திரை உலகின் முன்னோடி இயக்குனர்களின் வரிசையில் முக்கிய இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படும். அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்க உள்ளார்.
ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூர் வழங்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுல். ரோமியோ பிக்சர்ஸ் என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில் ராகுல் தயாரிக்க உள்ள இந்தப் படத்தின் மற்ற நடிகை, நடிகையர் , தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது.

தயாரிப்பாளர் ராகுல் படம் பற்றிக் கூறும்போது, ஆர்டிக்கல் 15" படம் வெளி வந்த உடனே அதற்கான தமிழ் உரிமையை வாங்கி போனிகபூர் வாங்கி விட்டார். பல்வேறு வருடங்களாகத் தயாரிப்பு, விநியோகம் என்று பல்வேறு துறைகளில் பல வெற்றிப் படங்கள் மூலம் தடம் பதித்த எனக்கு இப்பொழுது தயாரிப்பாளராக ஆகும் அந்தஸ்தை அவர் உருவாக்கித் தந்து உள்ளார். இதற்காக அவருக்கு வாழ் நாள் முழுதும் கடமைப்பட்டு இருக்கிறேன். நான் திரைத்துறைக்கு வந்து பணியாற்றிய முதல் நிறுவனம் உதயநிதி சாரின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் தான். இன்று அவரை வைத்து படம் தயாரிக்க வரை என்னை வளர்த்து ஆளாக்கி விட்ட உதயநிதி சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தக் கதை தான் என்று முடிவெடுத்த பின்னர் இயக்குனராக எங்கள் முதல் தேர்வு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தான். சமூக அவலங்களை தோலுறுத்திக் காட்டும் இந்தப் படத்தை இயக்க உணர்ச்சி பிழம்பாகக் காட்சி அமைக்கும் அருண் ராஜாவை விட வேறு யார் சிறப்பாகச் செய்து விட முடியும். அவரை இயக்குனராக ஒப்பந்தம் செய்து உடனே நாயகன் குறித்த விவாதத்தில் எங்கள் அனைவருடைய ஒருமிதக் கருத்தும் உதய் சார் தான் இதற்குப் பொருத்தமானவர் என்பது தான். இதற்காக அவரை அணுகியவுடன் தன்னுடைய இடைவிடாத அரசியல் மற்றும் சமுதாய களப் பணிகளின் இடையே இந்தப் படத்தைச் செய்ய ஒப்புக் கொண்டார். இந்த படத்தின் நாயகனின் பாத்திரம் உதயநிதி சாருக்கு கச்சிதமாகப் பொருந்தும் என்பது அனைவரின் நம்பிக்கை. அனைவரின் கவனத்தை ஈர்க்க உள்ள இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் பிரம்மாண்டமாக இருக்கும், விரைவில் படப்பிடிப்பு குறித்த தகவல்களும் வெளியாகும் " என்றார்.

You'r reading உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கும் கனா பட இயக்குனர்.. இந்தியில் பரபரப்பை ஏற்படுத்திய படம் தமிழில் ரீமேக் ஆகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை