இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவிய நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது, இதனால் வர்த்தக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், படப்பிடிப்புகள் எல்லாம் முடங்கின. பலர் வேலை வாய்ப்பை இழந்தனர், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. குறிப்பாக சினிமா ஷூட்டிங், டிவி ஷூட்டிங்குகள் தடைபட்டதால் எல்லா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. பலமுறை கோரிக்கை கள் வைத்த பிறகு தமிழக அரசு டிவி படப்பிடிப்புக்கு மட்டும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புகொரோனா கட்டுப் பாடு விதிமுறைகளுடன் நடத்தலாம் என அனுமதி வழங்கியது. ஆனாலும் முழுமையான படப்பிடிப்பு தொடங்கவில்லை.
சினிமா படப்பிடிப்பு நடத்தப் பல தரப்பிலிருந்தும் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று கூறியதாவது: சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் ஆகிய விதிகளைப் பின்பற்றிப் படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளலாம். நடிகர், நடிகைகள் தவிர மற்ற அனைவரும் முககவசம் அணிய வேண்டும். உடை, உபகரணங்களை மாறி, மாறி பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. வெளிப்புறப் படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கேமரா உள்ளிட்ட அனைத்து உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கட்டாயம் கையுறை அணிய வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் சமூக இடைவெளி யை பின்பற்றும் வகையில் 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குறைந்த அளவிலான ஊழியர்கள் மட்டுமே ஷூட்டிங்கில் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ஷூட்டிங்கிற்காக காத்திருந்தவர்கள் உடனடியாக ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அநேகமாக நாளை முதலே படப்பிடிப்புகள் தொடங்க பல முடிவு செய்துள்ளனர். 5 மாதத்துக்குப் பிறகு ஷூட்டிங் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.