Unlock 3ல் கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ``மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்துக்கு உள்ளேயும் பொதுமக்கள் பயணம் செய்யவும், பொருட்களைக் கொண்டுசெல்ல கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது. பொதுமக்கள் பயணிக்கவும், பொருட்களைக் கொண்டுசெல்லக் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பொருளாதாரரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும், `அரசின் இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றாதவர்கள் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி மத்திய அரசு அறிவித்த விதிமுறைகளை மீறுவதாகவே கருதப்படும்" என்று அறிவித்தார்.
இந்த உத்தரவை செயல்படுத்துவது குறித்து மாநிலங்கள் ஆலோசனை செய்து வருகின்றன. இந்நிலையில் முதல் மாநிலமாக, கர்நாடக அரசு இந்த உத்தரவை செயல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், ``மத்திய அரசின் கடைசி அறிக்கையின்படி இனி மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. மேலும், வெளி மாநிலங்களிலிருந்து கர்நாடகம் வரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, கொரோனா அறிகுறிகள் இல்லாத பயணிகள், எப்போதும் போல வேலையில் சேர்ந்து பணிபுரியலாம். அவர்களுக்கு 14 நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்துதல் தேவையில்லை.
அதேநேரம் கர்நாடகாவுக்கு வந்த நாள் முதல் 14 நாள்களுக்கு கொரோனா அறிகுறிகள் தங்களுக்கு இருக்கின்றதா என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும். இந்த விதிகள் கர்நாடகாவுக்கு வரும் அனைவருக்கும் பொருந்தும். மற்ற மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் எந்த கட்டுப்பாடுகளையும் பின்பற்ற தேவையில்லை" எனக் கூறப்பட்டுள்ளது.