கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் வேளையில் அனைவரும் தன் வாழ்வாதாரத்தையும் , சேமிப்பையும் இழந்து வாடும் நேரத்தில் அனைவரின் பார்வையும் விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது. பல தலைமுறைகளாக விவசாயமே பிரதான தொழிலாக நம்பியுள்ள மூத்த விவசாயிகளும் , இன்றைய காலகட்டத்தின் தொழில்நுட்பத்தோடு விவசாயத்தை அனுகும் இளம் தலைமுறை விவசாயிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது இந்த செய்தி.
KUSUM திட்டம்
Krish Urja Suraksha Evam Udaan Magaphyan எனப்படும் சூரியசக்தி தொடர்பான திட்டத்தை சென்றாண்டு மத்திய அமைச்சகம் தொடங்கியது. 2022 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 34 ஆயிரத்து 422 கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசு நிதி ஆதரவுடன், 25 ஆயிரத்து 750 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மற்றும் இதர புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித்திறனைக் கூடுதலாக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் மூன்று பாகங்களைக் கொண்டது.
திட்டத்தின் அம்சங்கள்
முதல் பாகம் : 10 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட கிரிட் இணைப்பு கொண்ட, நிலத்தில் பதியப்பட்ட, புதுப்பிக்கக்கூடிய, மையப்படுத்தப்படாத மின் ஆலைகளை அமைத்தல் - ஒவ்வொரு ஆலையும் 2 மெகாவாட் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது பாகம்: ஒவ்வொன்றும் 7.5 குதிரைத் திறன் கொண்ட, சூரிய சக்தியால் இயங்கக்கூடிய, தனித்தியங்கும் 17.50 லட்சம் விவசாயப் பம்புகள் அமைத்தல். மூன்றாவது பாகம்: ஒவ்வொன்றும் தனித்து 7.5 குதிரைத் திறன் கொண்ட, கிரிட் தொடர்பு கொண்ட 10 லட்சம் விவசாயப் பம்புகளை சூரிய சக்தியால் இயங்கச்செய்வது.
மானியம் எவ்வளவு?
தமிழ்நாட்டில் பிரதமர் குசும் திட்டம், வேளாண் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 17,500 சூரியசக்திப் பம்புகள் நிறுவப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மத்தியஅரசு 30 சதவிகிதம் மானியம் வழங்குகிறது. தமிழக அரசு 40 சதவிகித மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவில் 30 சதவீதத்தை மட்டுமே விவசாயி ஏற்றுக் கொள்ளவேண்டும்.
இவ்வாறாக செயல் படுத்தப்படும் திட்டத்தில் அனைத்து மின் மோட்டார்களும் மைய தொகுப்பின் புதுப்பிக்ககூடிய ஆற்றலின் கிரிடுடன் இணைக்கப்பட்டு பின்னர் அதற்கான மின் அளவீட்டை அறிய மின் மீட்டர் இணைத்து பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.