காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம், இரண்டு நாட்களுக்கு முன்பு காணொலி மூலம் நடந்தது. கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ``மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி நடந்து கொண்டிருந்த போது, மூத்த தலைவர்கள் இப்படியொரு பிரச்சனையை எழுப்பியது ஏன்? பாஜகவுடன் அவர்கள் ரகசியமாக உடன்பாடு வைத்துக் கொண்டு காங்கிரசைப் பலவீனப்படுத்துகிறார்களா?" என்று மூத்த தலைவர்களைக் குறிவைத்து கோபமாகப் பேசினார். இவரின் கோபத்துக்குக் காரணம், சோனியா காந்தியைத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எழுதிய கடிதம் தான்.
இதனால் கபில் சிபில் ராகுல் காந்தியைக் குறிவைத்து காட்டமாக டுவீட் போடா பின்னர் ராகுல் காந்தி பேசியதை அடுத்து அந்த டுவீட்டை வாபஸ் பெற்றார். இந்த ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் காரணமான அந்த கடித விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் பேசியுள்ளார்.காங்கிரஸுக்குச் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய முழுநேர தலைமை தேவை என்று மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, மிலிந்த் தியோரா மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள் 23 பேர் சோனியா காந்திக்கு இரண்டு முறை கடிதம் எழுதினர். அவர்களில் ஒருவர் தான் இந்த விவரங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
அதில், ``சுறுசுறுப்பான தலைமை வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இந்த தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடினர். இதற்கான ஆலோசனைகளை ஜனவரி மாதமே தொடங்கிவிட்டனர். ஆலோசனைக் கூட்டங்கள் முக்கியமாகக் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரின் இல்லங்களில் நடந்தன.மத்திய பிரதேச படுதோல்விக்குப் பிறகு, கமல்நாத்தின் காங்கிரஸ் அரசாங்கத்தை வீழ்த்தி பாஜகவுக்கு மாறிய ராகுல் காந்தி விசுவாசி ஜோதிராதித்யா சிந்தியா செயலுக்கு பிறகு இந்த ஆலோசனை தீவிரம் அடைந்தது. இந்த விவகாரங்கள் குறித்து கடும் கவலை அடைந்த எங்கள் குழு சோனியா காந்தியுடன் நேருக்கு நேர் சந்திப்பு நடந்த அனுமதி கோரியது. பல மாதமாக கேட்டும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைக்காததன் காரணமாகவே, கடிதம் அனுப்பும் பிளான் போடப்பட்டது.
கடித பிளான் குறித்த ரகசியம் காப்பாத்த யாருக்கும் கடிதத்தின் நகல் கொடுக்கப்படவில்லை. ஆனால் வரைவு குழுவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வாசித்து காண்பிக்கப்பட்டது. ஐந்து மாதங்கள் ரகசியமாக இப்படி தான் இந்தக் குழு செயல்பட்டது.ஜூன்-ஜூலை மாதங்களில் எங்கள் குழுவின் எண்ணிக்கை 20 க்கு மேல் அதிகரிக்க தொடங்கியது . ஆனால் நாங்கள் ஒரு சிறிய குழுவுடன் இருக்க முடிவு செய்தோம். காரணம் திட்டத்தின் ரகசியம் கருதியே. ஒருவேளை நாங்கள் அதிகமாக இருந்திருந்தால் திட்டம் கசிந்திருக்கும்" என்று கூறியுள்ளார்.