நெல்லை மாவட்டத்தில் ஆயுதப் படையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவரது சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். இந்நிலையில் இவரது தந்தை நாராயணசாமி திண்டுக்கல்லில் வைத்துக் கடந்த 14ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதுகுறித்து நெல்லையில் உள்ள இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மறுநாள் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நடைபெறும் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு மரணமடைந்த தந்தையைப் பார்க்கச் செல்ல அவருக்கு மனம் வரவில்லை. துக்கத்தை மனதுக்குள் அடக்கி சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவர் தீர்மானித்தார்.
தந்தை இறந்த துக்கத்தை மறந்து அவர் சுதந்திர தினவிழா அணிவகுப்பில் கலந்து கொண்டார். இதன்பிறகு அவர் திண்டுக்கல் சென்று தனது தந்தையின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தந்தையின் மரணத்திற்குக் கூட செல்லாமல் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பெண் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அவரை நேரடியாக வரவழைத்துப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.