கொரோனா வைரஸ் ஒரு புறம் உயிர்ப் பலிகளை வாங்கிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் அதனால் பல மனிதநேய சம்பவங்களும் நிகழ்ந்து இந்த உலகத்தை உயிர்ப்பித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு மற்றுமொரு சாட்சியாய், நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று புனேவில் நிகழ்ந்துள்ளது. கடந்த 14-ந் தேதி புனே மார்க்கெட் யார்டு பகுதியில் உள்ள அரசு கொரோனா சிகிச்சை மையத்தில் 71 வயது நோயாளி கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்கள் கழித்து அதிகாலையில் அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவரின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதனால் ஆக்சிஜன் கொடுப்பதற்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.
முதியவருக்குச் சிகிச்சை பார்த்து வந்த ரஞ்சித் நிகம் (வயது35) என்ற டாக்டர் அவரை வேறு மருத்துவமனையில் அனுமதிக்கும் பணியைப் பார்த்து வந்தார். இதையடுத்து சிகிச்சை மையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படவே, 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார் டாக்டர் ரஞ்சித். ஆனால் போன் ரீச் ஆகவில்லை.
இதன்பின் நேரத்தை வீணடிக்காமல் முதியவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு டாக்டர் ரஞ்சித்தே களத்தில் இறங்கினார். தன்னுடன் இருந்த மற்றொரு டாக்டர் ராஜ் புரோகித்தை உதவிக்கு அழைத்துக் கொண்டு, ஆம்புலன்ஸ் டிரைவராக மாறினார் ரஞ்சித். முதியவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு விரைந்தார்.சரியான நேரத்தில் டாக்டர் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியதால் முதியவரின் உயிர் காப்பாற்றப்பட்டது. இவரின் செயல் குறித்து முதியவரின் மகன் நெகிழ்ந்து பேசியுள்ளார். டாக்டரின் செயல் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.