முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திரு.பிரணாப் முகர்ஜி, சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் மரணம் அடைந்தார்.நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி, கடந்த 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பதவி வகித்தார். மத்திய அரசில் நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சராக பிரணாப் முகர்ஜி பணியாற்றியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மிராட்டி என்ற சிறிய கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களான கமதா கின்கர் முகர்ஜி, ராஜலெட்சுமி தம்பதிக்குப் பிறந்தவர் பிரணாப், வரலாறு மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்று, ஆரம்ப காலத்தில் கல்லூரி பேராசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர்.கடந்த 1969ம் ஆண்டில் முதன் முதலாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, 5 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். திட்டக்குழு துணைத் தலைவர், சர்வதேச நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் இயக்குனர் குழுக்களிலும் அவர் பணியாற்றியிருக்கிறார். நாட்டில் பொருளாதாரம் மற்றும் நிதி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியதில் சிறப்பாகப் பங்காற்றி உள்ளார்.
பிரணாப் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி உள்பட பல்வேறு தலைவர்களும், வெளிநாட்டுத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு வரும் 6ம் தேதி வரை ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த நாட்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்குகள் இன்று(செப்.1) மதியம் 2 மணிக்கு டெல்லியில் லோதி சாலையில் உள்ள இடுகாட்டில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.