ஜம்மு காஷ்மீரில் அலுவல் மொழிகளாக காஷ்மீரி மற்றும் டோக்ரி மொழிகளை அறிவிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர், மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் 70 சதவீதம் பேர் காஷ்மீரி மொழியையும், டோக்ரி மொழியையும் பேசுபவர்கள். ஆனால், இந்த மொழிகள் அரசின் அலுவல் மொழிகளாக இல்லை. இவற்றை அலுவல் மொழிகளாக அறிவிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், உருது, காஷ்மீரி, டோக்ரி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை ஜம்மு காஷ்மீரில் அலுவல் மொழிகளாக அறிவிப்பதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழிகள் சட்டம் 2020க்கான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் ஜம்மு தலைவர் தேவேந்தர்சிங் ராணா கூறுகையில், எனது தாய்மொழியான டோக்ரி அலுவல் மொழியானது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
காஷ்மீர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரவீந்தர் சர்மா கூறுகையில், பிராந்திய மக்களின் உணர்வுகளை மதிப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம், காஷ்மீரில் பகாரி, பஞ்சாபி, கோஜ்ரி ஆகிய மொழிகள் பேசுபவர்களும் இருக்கிறார்கள் என்றார்.