மிஷன் கர்மயோகி.. அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் வருகிறது..

Cabinet approves Mission Karmayogi scheme for Civil Services.

by எஸ். எம். கணபதி, Sep 3, 2020, 09:14 AM IST

மிஷன் கர்மயோகி என்ற பெயரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று(செப்.2) நடந்தது. இந்த கூட்டத்திற்குப் பின்னர், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசு அதிகாரிகள் சர்வதேச அளவில் சிறந்த செயல்முறைகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், இந்தியக் கலாச்சாரத்திலும் வேரூன்றி அதையும் அவர்கள் பாதுகாக்க வேண்டும். இதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மிஷன் கர்மயோகி என்ற பெயரில் அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம். இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களைப் படைப்பாற்றல் மிகுந்தவர்களாகவும், புதுமைகளைப் படைப்பவர்களாகவும், செயல்திறன் மிக்கவர்களாகவும் தயார்ப்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இது அரசின் மிகப்பெரிய மனிதவள மேம்பாட்டுத் திட்டமாக அமையும். பிரதமரின் பொது மனிதவள மேம்பாட்டுக் குழு, திறன் வளர்த்தல் ஆணையம், ஆன்லைன் பயிற்சிக்கான தொழில்நுட்ப தளத்தை நிர்வகிக்கும் சிறப்பு அமைப்பு, அமைச்சரவை செயலாளர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்புகளாக இருக்கும்.பொது மனிதவள மேம்பாட்டுக் குழுவில், சில மத்திய அமைச்சர்கள், சில மாநில முதலமைச்சர்கள், மனிதவள மேம்பாட்டு நிபுணர்கள் மற்றும் சர்வதேச ஆய்வு நிபுணர்கள் இடம் பெறுவார்கள். இந்த குழுவே இந்த திட்டத்தின் தலைமை அமைப்பாகச் செயல்பட்டு, அரசு ஊழியர்களை வழிநடத்தும்.
மத்திய அரசில் பணியாற்றும் 46 லட்சம் அரசு ஊழியர்களை உள்ளடக்கி இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 510 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மிஷன் கர்மயோகி திட்டம், மத்திய அரசின் மனிதவள நிர்வாக செயல்பாடுகளில் முற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த திட்டத்திற்குப் பாராட்டு தெரிவித்து பிரதமர் வெளியிட்ட பதிவுகளில், இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் தகுதியும், திறனும் மேம்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.கர்மயோகி திட்டம், அரசு ஊழியர்களை எதிர்காலத்துக்கு ஏற்றவாறு தயார்ப்படுத்தி, வெளிப்படைத் தன்மை மற்றும் தொழில்நுட்பங்களில் சிறந்தவர்களாக உருவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், இந்த திட்டம் அரசு நிர்வாகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading மிஷன் கர்மயோகி.. அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் வருகிறது.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை