கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இதனை வரும் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.வங்கிக் கடன்கள் மீதான வட்டி வசூலிப்பு பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தொற்று காலத்தில் வசூலிக்கப்பட வேண்டிய கடன்களுக்கான வட்டிப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். மத்திய அரசு அறிவித்த கடன் தவணை நிறுத்திவைப்பு சலுகை காலமான 6 மாதம் முடிவடைந்து விட்ட நிலையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற மக்களுக்குக் கூடுதல் உதவியை அளிக்க வேண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களுக்கு பொருளாதாரரீதியாக ஏற்பட்ட பிரச்சனைகள், அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது.
எனவே, உண்மையாகவே கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் நபர்களுக்கு உரிய உதவி கிடைக்க வேண்டும். இதற்குக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இதனை வரும் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்.
கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான முழு விவரங்களை வங்கி இணையதளங்கள், வங்கிக் கிளைகளில் பிராந்திய மொழிகளில் வெளியிட வேண்டும். இந்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி உதவ வேண்டும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.