இந்தியாவில் ரயில்வே, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன என்று அன்னிய நிறுவனங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க-இந்திய உத்திகள் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் மூன்றாவது வருடாந்திர உச்சி மாநாட்டில், காணொளி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(செப்.3) சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:இந்தியா சாதாரணச் சந்தையாக இருப்பதில் இருந்து, உலக அளவிலான உற்பத்தி மையமாக மாறுவதற்குச் சுயச்சார்பு இந்தியா திட்டம் வழிவகுக்கும். இந்தியாவின் 130 கோடி மக்களும் இந்த திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா ஒவ்வொரு காலகட்டத்திலும் உலக நன்மைக்காக அதிக அக்கறை காட்டி வந்திருக்கிறது. தற்போதைய கோவிட் 19 தொற்று காலத்தில், வளர்ச்சி என்பது மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.சர்வதேச விற்பனைச் சந்தை என்பது பணத்தின் அடிப்படையில் மட்டுமின்றி, நம்பிக்கையின் அடிப்படையில் மாற வேண்டும். இதைத்தான் கொரோனா நோய்ப் பாதிப்பு நமக்கு உணர்த்தியுள்ளது.
இந்தியாவில் பொதுத் துறை மற்றும் தனியார்த் துறைகளில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார மற்றும் சமூக நலத் துறைகளில் இந்த வர்த்தக வாய்ப்புகள் இருக்கின்றன. நிலக்கரி, சுரங்கம், ரயில்வே, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளில் முதலீடு செய்வதற்கு புதிய வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது வெளிப்படையான மற்றும் சரியாகக் கணிக்கக் கூடிய வரி முறைகள் பின்பற்றப்படுகிறது. ஜி.எஸ்.டி. என்ற ஒரே வரி விதிப்பு முறை செயல்படுத்தப்படுகிறது. மறைமுக வரிகளுடன் இணைந்த வருமான வரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலைத்தன்மை, கட்டமைப்பு போன்றவை கருத்தில் கொண்டு அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய முன் வர வேண்டும்.உலகின் மிகப் பெரிய வீட்டுவசதித் திட்டங்கள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து இணைப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்று காலத்தில் 80 கோடி மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.