இலங்கை கடலில் நின்ற எண்ணெய் கப்பலில் தீ.. இந்திய கப்பல்களால் தீயணைப்பு..

by எஸ். எம். கணபதி, Sep 4, 2020, 09:19 AM IST

இலங்கை கடலில் சென்று கொண்டிருந்த எம்.வி. நியூ டயமண்ட் என்ற எண்ணெய் கப்பலில் திடீரென தீப்பற்றியது. இந்தியாவின் கடலோர காவல் படைக் கப்பல் சவுரியா உடனடியாக அங்குச் சென்று தீயை அணைத்தது.இலங்கைக் கடலில் சங்கமன்கந்தா என்ற புள்ளி அருகே எம்.வி.நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. திடீரென இந்த கப்பலில் தீப்பற்றியது. இதையடுத்து, இலங்கை கடற்படைக் கப்பல்கள் அங்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்த முயன்றன.

அதே சமயம், இந்தியாவின் கடலோர காவல் படை கப்பலான சவுரியா மற்றும் கடற்படை கப்பல்கள் அங்கு விரைந்து சென்றன. அவை தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், ரசாயன நுரைகளைப் பீய்ச்சி அடித்தும் தீயைக் கட்டுப்படுத்தின. தீ விபத்துக்குள்ளான கப்பல், இலங்கைக்குச் சென்ற கப்பல் என்று ஏஎன்ஐ செய்தி தெரிவித்துள்ளது. ஆனால், அந்த எண்ணெய் கப்பல் 2 லட்சத்து 70 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு, குவைத்தின் மினா அல்அகமதி துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் பாரதீப் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தது என்று இலங்கை தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், கப்பலில் இருந்த ஒருவரைக் காணவில்லை, ஒருவர் தீக்காயம் அடைந்தார் என்றும் 19 பேர் காப்பாற்றப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.


More India News

அதிகம் படித்தவை