நமது அண்டை நாடான சீனா கடந்த சில மாதங்களாக நமது எல்லையில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கை ஆக்கிரமிக்க முயற்சி எடுத்த போது நமது வீரர்கள் சீன ராணுவத்துடன் சண்டையிட்டனர். இதில் இந்தியத் தரப்பில் தமிழக வீரர் பழனி உட்பட 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதன்பின் இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போர் பதற்றம் தணிந்தது. இதனிடையே, தான் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் லடாக் பான்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் நுழைய முயற்சித்தனர். ஆனால் இதனை இந்திய ராணுவம் முறியடித்தாலும், எல்லையில் தற்போது போர் பதற்றம் தொற்றியுள்ளது.
பதற்றத்தை தணிக்க இரு நாட்களாக ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால், `எல்லை பிரச்சினைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காணப்படும் என்று தலைமை தளபதி பிபின் ராவத் அதிரடியாக அறிவித்தார். தளபதியின் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்த நாளே ராணுவ தளபதி நராவனே, 2 நாள் பயணமாக நேற்று லடாக் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று அவர், லடாக் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார். மேலும் சீனாவுடன் சண்டையிடத் தயாராக இருக்கும் வகையில், முப்படைகளையும் தயார் நிலையில் வைக்கச் சொல்லிப் பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி எல்லையில் வீரர்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர். லடாக் எல்லை மட்டுமன்றி அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எனச் சீனாவை ஒட்டியுள்ள அனைத்து எல்லைப் பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இரு நாடுகள் மத்தியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.