லடாக் எல்லையில் சீனாவுக்கும் இந்தியாவுக்குமான பதற்றம் தணியவே தணியாது போல் இருக்கிறது. கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் லடாக் பான்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் நுழைய முயற்சித்தனர். ஆனால் இதனை இந்திய ராணுவம் முறியடித்தாலும், எல்லையில் தற்போது போர் பதற்றம் தொற்றியுள்ளது.
பதற்றத்தை தணிக்க இரு நாட்களாக ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த்தியும் தீர்வு எட்டாத நிலையில், `எல்லை பிரச்சினைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காணப்படும் என்று தலைமை தளபதி பிபின் ராவத் அதிரடியாக அறிவித்தார். அடுத்த நாளே ராணுவ தளபதி நராவனே, 2 நாள் பயணமாக நேற்று லடாக் புறப்பட்டு சென்றுள்ளார். இன்று அவர், லடாக் எல்லை பகுதிகளில் ராணுவத்தின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்துள்ளார்.
இதன்பின் பேசியவர், ``எல்லையின் நிலைமை சற்று பதட்டமாகவே இருக்கிறது. உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் இந்திய இராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நமது ராணுவ வீரர்கள் உலகின் மிகச்சிறந்தவர்கள். மிகவும் உந்துதல் கொண்டவர்கள். இவர்கள் நமது ராணுவத்துக்கு மட்டுமல்ல. தேசத்துக்கும் பெருமை சேர்ப்பார்கள். என்ன நடந்தாலும் சமாளிக்க, நமது படைகள் தயாராக உள்ளன" என்று பேசியுள்ளார்.