”வல்லுநர்கள் கணித்ததை விடவும் இந்தியவில் பொருளாதார வீழ்ச்சி அதிகமாக இருக்கிறது” - ரகுராம் ராஜன்

by Loganathan, Sep 9, 2020, 10:30 AM IST

இந்தியாவின் ஜிடிபி எதிர்மறையில் 23.9 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் , மத்திய அரசு இதனை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களிடம் பணத்தை நேரடியாக பணத்தை கொடுப்பது போன்ற அர்த்தமுள்ள நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் திரு.ரகுராம் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லிங்க்ட்-இன் ( Linkedin ) பக்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது

உலகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்ததை விடவும் இந்திய பொருளாதாரத்தில் அமைப்பு சாரா துறையின் வீழ்ச்சி அதிகமாக இருக்கிறது.அடுத்து வரும் காலங்களிலும் பொருளாதார வீழ்ச்சி இன்னும் மோசமாக இருக்கும்.

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவீன் வீழ்ச்சி மிக அதிகம் . அதிகம் பாதித்த இத்தாலியில் கூட பொருளாதார வீழ்ச்சி 12.4 சதவிகிதம் , அமெரிக்காவிலும் பொருளாதார வீழ்ச்சி 9.5 சதவிகிதம் தான் உள்ளது. எனவே நாட்டை நிர்வாகம் செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் சுயதிருப்தி மன நிலையிலிருந்து வெளியே வந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும்.

இலவச உணவு தானியங்கள் , வங்கிக்கடன் சலுகை போன்றவை தற்காலிக தீர்வுதான் . ஆட்டோமொபைல் விற்பனையை வைத்து மட்டும் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு நாடு திரும்பி விடும் என்பதனை ஏற்க முடியாது.இது சந்தையில் உள்ள உண்மையான நுகர்வோர்களின் தேவையை வெளிப்படுத்தாது .

கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்தே பொருளாதார வளர்ச்சி குறைந்து இருந்தது . அரசின் நிதி நிலையும் சிக்கலாகவே இருந்தது . எனவே இந்த சிக்கலில் இருந்து மீள இனியும் வளங்களை செலவு செய்யாமல் அரசு தயக்கம் காட்டினால் , அது தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் உத்திதான்.

தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை ரத்து செய்தது போன்றவை தற்காலிகமான அரைவேக்காடு சீர்திருத்தங்களாகும். நிவாரணம் இல்லாவிட்டால் சிறு நடுத்தர நிறுவனங்கள் வேலையாட்களுக்கு ஊதியம் தர முடியாது. அவர்களைப் பணியிலிருந்து நிறுத்துவார்கள் நிறுவனங்களும் கடனில் தள்ளப்பட்டு, இறுதியாக மூடப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

READ MORE ABOUT :

More India News