முடி வெட்டிய பார்பருக்கு அமைச்சர் கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா?

by Nishanth, Sep 11, 2020, 23:53 PM IST

சலூன் தொடங்க பண உதவி கேட்டு மத்திய பிரதேச மாநில அமைச்சரிடம் ஒரு பார்பர் வந்தார். தனக்கு முடிவெட்டி ஷேவ் செய்யுமாறும், வேலை பிடித்திருந்தால் உதவி செய்வதாகவும் அமைச்சர் கூறினார். உடனே மேடையில் வைத்தே முடி வெட்டிய பார்பரின் வேலை பிடித்திருந்ததால் அவருக்கு அமைச்சர் 60,000 பணம் கொடுத்து அசத்தினார்.
மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சராக இருப்பவர் விஜய் ஷா. இன்று அவர் கண்டாவா என்ற இடத்தில் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ரோஹிதாஸ் என்ற பார்பர், அமைச்சரிடம் சென்று கொரோனா காரணமாக தனக்கு வேலை எதுவும் இல்லை என்றும், சலூன் கடை தொடங்க ஏதாவது நிதியுதவி தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.


அப்போது எனக்கு முடிவெட்டி ஷேவ் செய்ய வேண்டும் என்றும், வேலை பிடித்திருந்தால் உதவி செய்கிறேன் என்றும் கூறினார். உடனே மேடையில் வைத்தே அமைச்சர் விஜய் ஷாவுக்கு அந்த வாலிபர் முடி வெட்டி ஷேவ் செய்தார். முடி வெட்டும் போது அமைச்சரும், லோஹிதாசும் முக கவசம் அணியவும், கைகளை சானிட்டைசரால் சுத்தம் செய்யவும் மறக்கவில்லை. அதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரோஹிதாசின் வேலை அமைச்சருக்கு மிகவும் பிடித்துப் போனது. முடி வெட்டி ஷேவிங் செய்ததற்கு கட்டணமாக ஒரு 100 ரூபாய் கிடைக்கும் என்று தான் அந்த பார்பர் கருதினார். ஆனால் அமைச்சர் விஜய் ஷா கொடுத்த பணத்தை பார்த்து ரோஹிதாஸ் அதிர்ச்சியடைந்தார். அவர் கொடுத்த 60,000 பணத்தை பார்த்து ரோஹிதாசுக்கு மயக்கம் வராத குறை தான். அந்தப் பணத்தை வைத்து சலூன் கடை தொடங்குமாறு கூறி அமைச்சர் விஜய் ஷா அவரை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

இது குறித்து அமைச்சர் விஜய் ஷா கூறியது: கொரோனா காரணமாக பலரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் நமக்கு இந்த நோய் வராது என்பதை அனைவருக்கும் உணர்த்துவதற்காகவே மேடையில் வைத்தே நான் முடி வெட்ட சம்மதித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


More India News