கேரளாவில் கொரோனா என்ற பெயர் கொண்ட இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நோயிடமிருந்து தப்பிக்க என்ன செய்வது என தெரியாமல் உலகமே பரிதவித்துக் கொண்டிருக்கிறது. உலகின் நிலை இப்படி இருக்கும் போது கேரளாவில் ஒரு இளம்பெண் கொரோனா என்ற பெயருடன் வலம் வந்து அனைவரையும் கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள சுங்கம் என்ற இடத்தை சேர்ந்தவர் ஷைன் தாமஸ். இவரது மனைவிக்குத் தான் பின்னால் வரும் விளைவுகள் குறித்து எதுவும் தெரியாமல் கொரோனா என பெயர் வைத்து விட்டார்கள். அப்போது நடந்த சம்பவம் குறித்து கொரோனா கூறுவதை நாம் கேட்போம்....எனது சொந்த ஊர் ஆலப்புழா அருகே உள்ள முதுகுளம் ஆகும். எனக்கு இப்போது 34 வயது ஆகிறது.
நான் பிறந்த பின்னர் எனக்கு ஞானஸ்நானம் செய்வதற்காக என்னை அங்குள்ள செயின்ட் செபஸ்டியன் சர்ச்சுக்கு என்னை கொண்டு சென்றனர். எனக்கு பெயர் வைக்க வேண்டும் என்று அப்போது இருந்த பாதிரியார் ஜேம்சிடம் பெற்றோர் கூறினர். நீங்கள் பெயர் எதையும் தேர்வு செய்து கொண்டு வரவில்லையா என்று பாதிரியார் ஜேம்ஸ் என்னுடைய பெற்றோரிடம் கேட்டுள்ளார். எங்கள் வசம் பெயர் ஒன்றும் இல்லை, நீங்களே ஒரு நல்ல பெயரை வைத்து விடுங்கள் என்று என்னுடைய பெற்றோர் கூறியுள்ளனர்.
அப்படி பாதிரியார் ஜேம்ஸ் எனக்கு வைத்த பெயர் தான் இந்த கொரோனா. இந்தப் பெயரால் பின்னர் எனக்கு தலைவலி ஏற்படும் என்று அப்போது பாதிரியாரோ எனது பெற்றோரோ நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். நான் அடிக்கடி ரத்த தானம் செய்வதற்காக மருத்துவமனைக்கு செல்வது உண்டு. அப்போது அங்கு தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது எனது பெயரை நான் எழுதுவேன். அதை பார்க்கும் அங்கிருப்பவர்கள், 'உங்கள் பெயரை எழுதச் சொன்னால் ஏன் கோரணா என்று எழுதினீர்கள்' என்று கேட்பார்கள். உண்மையிலேயே எனது பெயர் அதுதான் என்று கூறினாலும் அதை மாட்டார்கள். நான் கிண்டலடிப்பதாக கருதுவார்கள்.
எனது இரண்டு மகன்கள் 3 மற்றும் 5 ஆம் வகுப்புகளில் படிக்கின்றனர். அவர்கள் ஆன்லைன் வகுப்பில் சேரும்போது விண்ணப்பத்தில் எனது பெயரை கொரோனா என்று குறிப்பிட்டனர். இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த வகுப்பு ஆசிரியர் எனக்கு போன் செய்து உங்கள் குழந்தைகள் உங்கள் பெயரை கொரோனா என்று எழுதி இருக்கின்றனர். இப்படி எல்லாம் பள்ளி விண்ணப்பத்தில் விளையாடக்கூடாது என்று கூறினர். ஆனால் உண்மையில் எனது பெயர் கொரோனா தான் என்று கூறு கூறிய பின்னர் தான் அவர்களுக்கு நம்பிக்கை வந்தது.
கொரோனா நோய் பரவும் வரை எனக்கு அதிகமாக எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஆனால் இந்த நோய் தற்போது தீவிரம் அடைந்த பின்னர்தான் எனக்கு தலைவலி ஏற்பட்டது. சில சமயங்களில் எனது மகன்கள் என்னை செல்லமாக 'வைரஸ் அம்மா', 'கொரோனா அம்மா' என்று கிண்டல் செய்வதுண்டு. ஆனால் எனக்கு அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. எப்படியாவது இந்த கொரோனா நோய் உலகத்தை விட்டு ஒழிந்தால் நிம்மதியாக இருக்கும். கொரோனா நோயைக் கண்டு பயந்தால் போதும். என்னைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம் என்று கூறுகிறார் இந்த கேரள பெண் கொரோனா.