ஆறு முக்கிய நகரங்களின் விமான நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திற்கு அளித்தில் மத்திய அரசு விதிகளை மீறியுள்ளதாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. காலையில் மாநிலங்களவையும், பிற்பகலில் மக்களவையும் நடைபெறுகிறது. மாநிலங்களவையில் இன்று, ஏர்கிராப்ட் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த சட்டமசோதா மீது நடந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் பேசினார்.
அவர் பேசியதாவது:
ஆறு முக்கிய நகர விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தும் பணியை அதானி குழுமத்திற்கே அளித்ததில் பல விதிமீறல்கள் நடந்துள்ளன. ஒரே நிறுவனத்திடமே மொத்தமாக விமான நிலையங்களை ஒப்படைத்தது சரியல்ல. விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சில துறைகளில் இருந்து எதிர்ப்பு வந்த போதும், அதை அரசு பொருட்படுத்தவில்லை. ஏலத்தில் அதானி குழுமத்திற்கே ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு பதிலளித்து விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கூறுகையில், கடந்த 2006ம் ஆண்டில் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையப் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விமான நிலையங்களின் போக்குவரத்து மற்றும் மொத்த விமானப் போக்குவரத்து வருவாயில் 33 சதவீதமாகும். ஆனால், இந்த 6 விமான நிலையங்களில் வருவாய் மொத்தம் 9 சதவீதம்தான் என்றார்.