கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுடன் மருத்துவமனையில் வைத்து செல்பி எடுத்த 6 பெண் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்திய வழக்கு கேரளாவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் ஒரு சாதாரண ஆள் இல்லை என்று மெல்ல மெல்லத் தான் விசாரணை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இவர் அமீரக தூதரகத்தில் மட்டுமல்லாமல் கேரள அரசிலும் பெரும் செல்வாக்குடன் இருந்து வந்துள்ளார்.
கேரள முதல்வர் அலுவலகத்திலும் இவருக்கு பெரும் செல்வாக்கு இருந்ததாக நீதிமன்றமே தெரிவித்தது. பல முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் இவர் தன்னுடையை கைக்குள் வைத்திருந்தார். அதுமட்டுமலாமல் அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் மகன்களுடனும் இவர் நெருக்கம் வைத்திருந்தார். இவருடன் தொடர்பு வைத்திருந்த கேரள மாநில சிபிஎம் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகனிடம் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அமலாக்கத் துறை 11 மணிநேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தியது. மேலும் கேரள தொழில் துறை அமைச்சரான ஜெயராஜனின் மகன், ஸ்வப்னாவுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஒரு போட்டோ வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சூரிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெண் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். இவர்களில் 6 பெண் போலீசாருக்கு ஸ்வப்னாவுடன் செல்பி எடுக்க ஆசை ஏற்பட்டது.
தங்களது ஆசையை அவர்கள் ஸ்வப்னாவிடம் கூறினர். அவரும் அதற்கு ஓகே சொன்னார். இதை தொடர்ந்து அந்த 6 பெண் போலீசாரும் ஸ்வப்னாவுடன் ஆசை தீர செல்பி எடுத்தனர். இந்த விவகாரம் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த 6 செல்பி பெண் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.