மூணாறு நிலச்சரிவு ஏற்பட்டு 40 நாள் ஆன நிலையில் அந்த இடத்தில் நேற்று மும்மத பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் இறந்தவர்களின் உறவினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த மாதம் 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 66 பேர் பலியானார்கள். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் சிக்கிய இன்னும் 4 பேரைக் காணவில்லை. பல நாட்களாகத் தேடியும் இவரது உடல் கிடைக்காததால் தற்போது மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விபத்து நடந்து நேற்று 40 நாள் ஆனதைத் தொடர்ந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி நிலச்சரிவில் இறந்தவர்களின் உறவினர்கள் தமிழ் நாட்டிலிருந்து மூணாறு சென்றனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அங்குத் திரண்டனர்.மும்மத பிரார்த்தனையுடன் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிலச்சரிவு நடந்த இடத்தில் மலர் தூவி அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதில் கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டனர். தேவிகுளம் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்பட அரசு அதிகாரிகளும் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.