திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தேசிய புலனாய்வு அமைப்பினரின் விசாரணையில் இருந்து தப்பிக்க நெஞ்சுவலி நாடகமாடியது தெரியவந்துள்ளது.திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் திருச்சூரில் உள்ள மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மட்டுமில்லாமல் இந்த வழக்கில் தொடர்புடைய பெரும்பாலானோர் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறையில் கெடுபிடிகள் மிக அதிகம். குறிப்பாகத் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் சிறை அதிகாரிகள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். பெரும்பாலும் செல்லிலிருந்து இவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அத்தியாவசிய காரியங்களுக்கு மட்டுமே செல்லில் இருந்து வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக ஸ்வப்னா கூறினார். இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் 6 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. ஆனால் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 3 தினங்களுக்கு முன் இவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனக்கு மீண்டும் நெஞ்சு வலிப்பதாக ஸ்வப்னா கூறினார். இவர் மட்டுமல்லாமல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீஸ் என்பவர் தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறினார். இதையடுத்து இருவரையும் உடனடியாக திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் வைத்து இவருக்கு இசிஜி, எக்கோ உள்படப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிய வந்தது. ஆனாலும் தனக்கு நெஞ்சு வலி குறையவில்லை என்று அவர் கூறினார்.
இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்த டாக்டர்கள் தீர்மானித்தனர். இதன் பிறகு தான் இந்த சம்பவத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. ஆஞ்சியோகிராம் செய்வதற்கு முன் நோயாளியிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். இதற்காக அவரிடம் கையெழுத்து கேட்டபோது தனக்கு இப்போது நெஞ்சு வலி எதுவும் இல்லை என்று கூறினார். அப்போது தான் ஸ்வப்னா தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறியது நாடகம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை உடனடியாக மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இதேபோல வயிற்று வலி என்று கூறி அனுமதிக்கப்பட்ட ரமீசும் பொய் சொல்லித் தான் மருத்துவமனையில் சேர்ந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் சேர்ந்து ரகசியத் திட்டம் தீட்டுவதற்காகவே மருத்துவமனையில் சேர்ந்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். இதற்கிடையே கடந்த முறை ஸ்வப்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நர்ஸ் ஒருவரின் செல்போனை வாங்கி ஒரு முக்கிய நபரிடம் பேசியது தெரியவந்தது. மேலும் அவருடன் 6 பெண் போலீசார் செல்பி எடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்வப்னாவை என் ஐ ஏ மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கத் தீர்மானித்தது. இந்த விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காகவே இவர் நெஞ்சுவலி நாடகம் ஆடினார் எனத் தெரியவந்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மீண்டும் என் ஐ ஏ காவலில் விடப்பட்டார்.