தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் 122 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது ராஜ்யசபாவில் அதிர்ச்சி தகவல்

by Nishanth, Sep 16, 2020, 14:08 PM IST

தமிழ்நாடு, கேரளா உள்படத் தென் மாநிலங்களில் இதுவரை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் உள்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவிலும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் செயல்பட்டு வருவதாக ஏற்கனவே மத்திய உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் இந்தியாவில் பல பகுதிகளில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் ரகசியமாகச் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் என்ஐஏ இறங்கியது. இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பது: இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகக் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பினரின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

இது தொடர்பாக என்ஐஏ நடத்திய விசாரணையில் தமிழ்நாடு உள்படத் தென் மாநிலங்களிலிருந்து இதுவரை 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்மாநிலங்களில் கேரளாவில் தான் ஐஎஸ் இயக்கத்தின் செயல்பாடு அதிகளவில் உள்ளது. தென்மாநிலங்களில் மட்டுமில்லாமல் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் ஐஎஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get your business listed on our directory >>More India News

அதிகம் படித்தவை