மத்திய அமைச்சர் கவுர் ராஜினாமா ஏற்பு.. தோமரிடம் துறை ஒப்படைப்பு..

by எஸ். எம். கணபதி, Sep 18, 2020, 09:12 AM IST

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். அவர் வகித்த உணவு பதனிடுதல் தொழில் துறையை அமைச்சர் தோமரிடம் ஒப்படைத்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே வேளாண்மை தொடர்பான 2 அவசரச் சட்டங்களை இயற்றியிருந்தது. அவற்றுக்கு மாற்று சட்ட மசோதாக்கள் உள்பட 3 மசோதாக்களை இந்த தொடரில் அறிமுகம் செய்தது.

விவசாயிகளுக்கான உற்பத்தி, வர்த்தக மேம்படுத்தல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்ட மசோதா, விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலி தளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.அந்த மசோதாக்கள் மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீா் சிங் பாதல் பேசும்போது, பஞ்சாப்பில் கடந்த 50 ஆண்டுகளாக வேளாண் துறையைக் கட்டமைக்க மிகச் சிறந்த முறையில் மேற்கொண்ட கடின உழைப்பை இந்த இரு சட்ட மசோதாக்களும் முற்றிலும் பாதிக்கும்.

எனவே, இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹா்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் என்று அறிவித்தார். அகாலிதளம் கட்சியின் சார்பில் மத்திய அரசில் இடம்பெற்றிருந்த ஹர்சிம்ரத் கவுர், சுக்பீர்சிங் பாதலின் மனைவி ஆவார்.
இந்நிலையில், அவர் அறிவித்தபடி ஹா்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை நேற்று மாலையில் ராஜினாமா செய்தார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதை அறிவித்ததுடன், விவசாயிகளின் மகளாகவும், சகோதரியாகவும் அவர்களுக்குத் துணை நிற்பதில் பெருமைகொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து, அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். தற்போது ஹர்சிம்ரத் வகித்த உணவு பதனிடும் தொழில்கள் துறை, வேளாண்மை அமைச்சர் தோமரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More India News

அதிகம் படித்தவை