கேரளாவில் ஒரு கடையில் திருடிய பொருட்களுக்கான பணத்தை திரும்ப ஒப்படைத்துக் கடை உரிமையாளரிடம் திருடன் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.'திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்று எம்ஜிஆரின் 'திருடாதே' படத்தில் ஒரு பாடல் வரும். அதே போல ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அலநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமர். இவர் அப்பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவர் வழக்கம்போல தனது கடையைத் திறப்பதற்காக வந்தார். அப்போது கடை வாசலில் ஒரு சிறிய பார்சல் இருந்தது.
அதைச் சந்தேகத்துடன் எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது அதில் 5000 ரூபாயும், ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.....'காக்கா, (மலையாளத்தில் அண்ணன் என்று பொருள்) நானும் எனது நண்பனும் சேர்ந்து ஒரு நாள் உங்களது கடைக்குள் நுழைந்து சில பொருட்களைத் திருடினோம். அப்போது எனக்கு ஏற்பட்ட புத்தி கோளாறு காரணமாக அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. அந்த திருட்டுக்குப் பின்னர் என்னுடைய மனசுக்கு என்னவோ செய்தது. நீங்கள் கடவுளிடம் என்னைக் குறித்து ஏதும் கூறி விடுவீர்களோ என எனக்குக் கவலை ஏற்பட்டது. நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கருதியிருந்தேன். ஆனால் பயம் காரணமாக உங்களைச் சந்திக்க முடியவில்லை. என்னை ஒரு தம்பியாக நினைத்து மன்னிக்க வேண்டும். கடவுளிடம் எனக்காகப் பிரார்த்திக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தைப் படித்த பின்னர் தான் கடந்த 6 மாதங்களுக்கு முன் தன்னுடைய கடையில் ஓட்டை பிரித்து நுழைந்து யாரோ சாக்லேட், பேரீச்சம் பழம், மற்றும் ஜூஸ் ஆகிய உணவுப் பொருளைத் திருடிச் சென்றது நினைவுக்கு வந்தது. இது தொடர்பாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்திருந்தார். ஆனால் யாரும் பிடிபடவில்லை. நாளடைவில் அந்த சம்பவத்தை உமர் மறந்து விட்டார். ஆனாலும் அந்த திருடனை நான் அப்போதே மன்னித்து விட்டேன் என்று உமர் கூறுகிறார். 'கடைக்குள் நுழைந்து திருடன் பணத்தையோ, விலை உயர்ந்த பொருட்களையோ எதையும் திருடவில்லை. உணவுப் பொருட்களைத் தான் திருடி இருக்கிறான். யாராவது பசிக்காகத் திருடியிருக்கலாம் எனக் கருதி அப்போதே நான் அந்த திருடனை மன்னித்து விட்டேன்' என்று பெருந்தன்மையுடன் கூறுகிறார் இந்த கடைக்காரர் உமர்.