கேரளாவில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட மாநிலங்களில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் உள்ளனர் என்று ஐநா சபை இந்திய அரசுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து இந்த மாநிலங்களில் மத்திய உளவு அமைப்புகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட 120க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை மேற்கு வங்கம், கேரளா உள்பட 12 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ நடத்திய அதிரடி சோதனையில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான அல் கொய்தா அமைப்பை சேர்ந்த 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத்தில் 6 தீவிரவாதிகளும், கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் 3 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது மத்திய உளவுத்துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் இந்தியாவில் டெல்லி, கொச்சி கடற்படைத்தளம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து துப்பாக்கிகள் உட்பட பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் ஐ எஸ், அல் கொய்தா உட்பட பல தீவிரவாத குழுக்களுக்கு ஸ்லீப்பர் செல்களாக செயல்படுவர்கள் கேரளாவில் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் என்ற போர்வையில் கேரளாவில் பல இடங்களில் இருப்பதாகவும், அவர்கள் தீவிரவாதிகளுக்கு தேவையான பல உதவிகளை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை மத்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவர்களை கைது செய்ய ஆபரேஷன் சக்கரவியூகம் என்ற பெயரில் மத்திய உளவுத்துறை ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. இதற்காக கேரளா முழுவதும் சந்தேகத்திற்கிடமான இடங்களில் மத்திய உளவுத்துறை ரகசியமாக பலரையும் கண்காணித்து வருகின்றனர். இவர்கள் சமூக இணையதளங்களில் தகவல்களை பரிமாறி வருவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் பயன்படுத்தும் சமூக இணைய தளங்கள் குறித்து விவரங்களையும் உளவுத்துறை சேகரித்துள்ளது.