நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் அதிகமாகி உள்ளது. இது புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகும். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. நோய்ப் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா முதலிடமும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் இது வரை 56 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. இதில் 80 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், இறப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாகப் புதிதாகத் தொற்று பாதிப்பவர்களை விடக் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:உலக அளவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகமாகும். கடந்த 19ம் தேதியன்று புதிதாக 93,337 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.
ஆனால், அன்று 95,880 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். 20ம் தேதியன்று புதிதாக 92,605 பேருக்குத் தொற்று பாதித்தது. 94,612 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். செப்.21ம் தேதியன்று 86,961 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டது. அன்று 93,356 பேர் நோயிலிருந்து விடுபட்டு வீடு திரும்பினார்கள். தொடர்ந்து மூன்று நாட்களாகக் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை, தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகி வருகிறது.இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.