சஹலின் சுழலில் சரணடைந்த ஹைதராபாத் !

Hyderabad surrenders in Sahals spin!

by Loganathan, Sep 22, 2020, 09:54 AM IST

13வது ஐபிஎல் லீக் சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்குத் துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது .முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய படிக்கல் மற்றும் பின்ச் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் மிக அருமையான அடித்தளம் அமைக்கப்பட்டது . இது அணிக்கு ஒரு பெரும் பலமாகும் . பெங்களூர் அணியின் ஸ்கோர் 90 அடையும் போது தான் முதல் விக்கெட்டை ஹைதராபாத்தால் பெற முடிந்தது .

பின்னர் களம் கண்ட டிவில்லியர்ஸ் எப்போதும் போலத் தனது சிறப்பான ஆட்டத்தால் எதிரணியின் பந்து வீச்சை அனைத்து திசைகளிலும் தெறிக்கவிட்டார். இவரின் அதிரடியால் பெங்களூர் அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் 163 / 5 ரன்களை எட்டியது.

ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை அவர்களால் பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் நேர்த்தியான பந்து வீச்சால் ரன் ரேட்டை குறைத்தனர். இல்லையென்றால் பெங்களூர் அணி மிக எளிதாக ஒரு இமாலய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்திருக்கும். நடராஜனின் பந்து வீச்சு முதல் ஓவருக்கு பிறகு சிறப்பாக அமைந்தது. முதல் ஓவரில் அவரால் சரியான யார்க்கரை வீச முடியாமல் அவை ஓவர் பிட்ச் பந்தானதால் சுலபமாக அடிக்க நேர்ந்தது. இதைச் சுதாரித்துக் கொண்ட நட்டு அவர்கள் பின்னர் பந்தை ஸ்டெம்ப் லைனில் புல் யார்க்கர் திசையில் வீச ரஷீத்திடம் கேட்ச்சானார் கோலி . இல்லையென்றால் மிகப்பெரிய ஸ்கோரை நேற்றைய ஆட்டத்தில் எதிர்பார்த்து இருக்கலாம்.

மிட்செல் மார்ஷ் வெளியேறியது ஹைதராபாத் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஆனால் மீண்டும் களமிறங்கி தனது ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்பை நிரூபித்துள்ளார் இதற்காகவே அவரை பாராட்டலாம்.ஆரம்பம் முதலே பெங்களூர் அணிக்கு சில சாதகமான சூழல் இயற்கையாகவே நடந்தது .164 என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு , எதிர்பாராத வகையில் உமேஷ் யாதவ் வீசிய பந்தை பேர்ஸ்டோ அடிக்க , அந்த பால் பவுலரின் கையில் லேசாக உரசி ரன்னர் சைடில் இருந்த ஸ்டெம்பில் பட்டு வார்னரை வெளியேற்றக் காரணமாகிப் போனது .ஆனால் பின்னர் இணைந்த ஜோடி பேர்ஸ்டோ மற்றும் மனிஷ் பாண்டே நிதானமாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். முதல் பத்து ஓவர் வரை இந்த ஜோடியை எந்த பவுலராலும் பிரிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆஃப் சைடு பார்வேர்டு திசையில் வந்த பேர்ஸ்டோவின் எளிதான கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் பின்ச் .இதனைப் பயன்படுத்திக் கொண்ட பேர்டஸ்டோ தனது அதிரடியைக் காட்டினார் . ஒரு கட்டத்தில் வெற்றி வாய்ப்பு ஹைதராபாத் அணிக்குச் சாதகமாக இருந்தது.

இந்நிலையில் பெங்களூர் அணியின் நிரந்தர சுழல் பந்து வீச்சாளரான சஹல் 12 ஓவரை வீசினார். லெக் ஸ்பின்னர் ஆன இவர் முதல் நான்கு பந்துகளையும் ஆஃப் ஸ்டெம்ப் லைனில் வீசினார் . ஐந்தாவது பந்தையும் ஆஃப் ஸ்டெம்ப் லைனில் வீச அதுவும் டாட் பால் ஆனது இதனால் பேட்டிங் செய்து கொண்டிருந்த மனிஷ் பாண்டே மீது அழுத்தத்தை ஏற்படுத்தக் கடைசி பந்தை சஹல் லெக் சைடு ஸ்டெம்ப் லைனில் மெதுவாக வீச ஸ்ட்ரைட் ஆஃப் சைடு திசையில் சைனியிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார் மனிஷ் .

இந்த ஓவர் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது .பின்னர் 16 வது ஓவரை வீசிய சஹல் முதல் பந்தை ஸ்டெம்ப் திசையில் போட அது டாட் பாலானது . பின்னர் இரண்டாவது பந்தை ஸ்டெம்ப் லைனில் மெதுவாக வீச , பேர்ஸ்டோ பந்தின் வேகத்தைக் கணிக்காமல் மிட் ஆன் திசையில் ஸ்வீப் ஷார்ட் அடிக்க சுழற்றியபோது , பந்தைக் கோட்டை விட்டு போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய விஜய் சங்கருக்கு முதல் பாலே கூக்லி வீச அவரும் போல்டானார் . இதனால் 121/4 என மெல்ல அணி திணறியது .

சஹலின்(4-0-18-3) இந்த இரண்டு ஓவர்கள் தான் பெங்களூர் அணியை வெற்றியின் பக்கம் இழுத்துச் சென்றது .பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொர்ப்ப ரன்களில் அவுட் ஆக வெற்றியைப் பதிவு செய்தனர் பெங்களூர் ‌.ஆனாலும் கோலியின் நேர்த்தியான திட்டமிடலில் அவர் ஓரளவு மெருகேற்றியிருப்பதைக் காண முடிந்தது. வாஷிங்டன் சுந்தர் போன்ற ஸ்பின் பவுலரை அவர் ஒரு ஓவரோடு நிறுத்தியது மிக பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது . ஆனால் போட்டியின் பிற்பாதியில் பனியின் தாக்கம் அதிகம் இருந்ததால் பந்து சுழல சிரமமாக இருக்கும் என உத்தேசித்து அந்த பணியை முடிக்க ஷிவன் துபே( 3-0-15-2) விடம் பந்து வீச சொல்ல அவரும் நேற்றைய ஆட்டத்தில் அந்த பணியை செவ்வனே செய்து முடித்தார்.

ஆனால் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் பத்து ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினால் வெற்றி பெறுவது கடினமாகவே இருக்கும். ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரைப் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாகப் பந்து வீசினாலும் விக்கெட் வீழ்த்தவேண்டும் . இல்லையெனில் எதிரணியின் மேல் நெருக்கடியைக் கொண்ட வர முடியாது . மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

For Album: CLick the below link.

https://bit.ly/3kEdFdW

இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்.

You'r reading சஹலின் சுழலில் சரணடைந்த ஹைதராபாத் ! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை