விடிய விடிய போராட்டம்.. சஸ்பெண்ட் எம்.பி.க்களை சந்தித்து பேசிய ஹரிவன்ஷ்..

RajyaSabha Deputy Chairman Harivansh meets 8 suspended MPs.

by எஸ். எம். கணபதி, Sep 22, 2020, 10:07 AM IST

நாடாளுமன்றத்தில் விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்ட 8 சஸ்பெண்ட் எம்.பி.க்களை ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இன்று சந்தித்துப் பேசினார். மாநிலங்களவையில் நேற்று முன் தினம்(செப்.20) வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராகேஷ் ஆகியோர் மசோதாக்களில் திருத்தங்களைக் கொண்டு வரக் கோரிக்கை விடுத்தனர். தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் நரேந்தரசிங் தோமர் பேசும் போது, பகல் 1 மணி ஆகி விட்டது. ஆனால், அவர் பேசி முடிக்கும் வரை அவை நேரத்தை நீட்டிப்பதாக அவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தெரிவித்தார். திரிணாமுல், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையை ஒத்தி வைத்து, அமைச்சரின் பதிலுரையை நாளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென்றும் கோரினர். அதை நிராகரித்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ், குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவை தலைவர் இருக்கை அருகே சென்று கடும் அமளியில் ஈடுபட்டனர். மைக்கைப் பிடித்து இழுத்து உடைக்க முயற்சித்தனர். விதி புத்தகங்களைக் கிழித்து வீசியெறிந்தனர்.
இதைத் தொடர்ந்து, திரிணாமுல் கட்சியின் டெரிக் ஓ பிரையன், டோலா சென், காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சதவ், சையத்நாசர் ஹுசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கட்சியின் கே.கே.ராஜேஷ், எலமரம் கரீம், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங் ஆகிய 8 பேரும் அவை விதிகளை மீறி விட்டதாகக் கூறி, அவர்களை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் விதிகளை மீறி வாக்கெடுப்பு நடத்தி ஜனநாயக படுகொலை செய்து விட்டதாகவும், 8 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது இன்னும் மோசமானது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இதன்பின்னர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்றிரவு(செப்.21) முழுவதும் போராட்டத்தைக் கைவிடவில்லை. காந்தி சிலை அருகேயே படுத்து உறங்கினர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 7.30 மணிக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அந்த இடத்திற்குச் சென்று அந்த எம்.பி.க்களிடம் பேசினார். அவர்களிடம் அவர் கருத்துக்களைக் கேட்டறிந்தார். நடந்த சம்பவங்களுக்கு அவரும் வருத்தம் தெரிவித்தாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று அந்த 8 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More India News

அதிகம் படித்தவை