தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் ₹ 2000 கோடிக்கும் மேல் மோசடி செய்த பாப்புலர் நிதி நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பாப்புலர் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நாளடைவில் கேரளாவிலும், பின்னர் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா உட்பட மாநிலங்களிலும் கிளைகளை தொடங்கியது. மிக நம்பகமான நிதி நிறுவனம் எனப் பெயர் இருந்ததால் ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். நகைக்கடன், பணப்பரிமாற்றம், நிரந்தர முதலீடு உட்படப் பல சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் இந்த நிறுவனத்தின் கேரளாவில் உள்ள கிளைகள் திடீரென மூடப்பட்டன. இதையடுத்து வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சில நாட்களிலேயே அனைத்து கிளைகளும் அடுத்தடுத்து மூடப்பட்டன. இதன் உரிமையாளர்களான ராய் டேனியல், இவரது மனைவி பிரபா தாமஸ் மற்றும் அவர்களது 3 மகள்களும் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் தேடி வந்தனர். வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயன்ற இவர்கள் 5 பேரும் பல்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவர்கள் மோசடி நடத்திய ₹2,000 கோடிக்கு மேல் பணத்தைப் பல வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகவும், எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி பல வாடிக்கையாளர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இது தொடர்பாக முடிவைத் தெரிவிக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகக் கேரள அரசு தெரிவித்தது. இந்நிலையில் பாப்புலர் நிறுவன மோசடி குறித்து சிபிஐ விசாரிக்க இன்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.