திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் இன்று மீண்டும் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாகத் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பு இருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், கேரள முதல்வரின் முதன்மை செயலாளராகவும் இருந்த சிவசங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரிடம் ஏற்கனவே சுங்க இலாகா மற்றும் என்ஐஏ 3 முறை பல மணி நேரம் விசாரணை நடத்தியது.
இதற்கிடையே பெங்களூருவில் வைத்து ஸ்வப்னா கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்த செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்டிஸ்க் ஆகியவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் முக்கிய தகவல்கள் இருக்கலாம் என்பதால் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் அவை பரிசோதிக்கப்பட்டன. இந்த பரிசோதனையில் பல முக்கிய திடுக்கிடும் விவரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. முதலில் ஸ்வப்னாவிடம் விசாரித்தபோது அவர் கூறாத பல விவரங்கள் அதிலிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்வப்னாவிடம் மீண்டும் விசாரணை நடத்த என்ஐஏ தீர்மானித்தது. இதையடுத்து ஸ்வப்னா மற்றும் அவருடன் கைதுசெய்யப்பட்ட சரித்குமார், சந்தீப் நாயர் முகமது அன்வர் ஆகியோரையும் என்ஐஏ காவலில் எடுத்து விசாரித்து வந்தது. இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஸ்வப்னா கும்பலுடன் பல முக்கிய பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இன்று ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் கொச்சியில் வைத்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. அவரையும், ஸ்வப்னா மற்றும் நான்கு பேரையும் ஒன்றாக ஒரே அறையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.