டைரக்டர் டி.ராஜேந்தர் அனைத்து மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகவும், சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகவும் உள்ளார். கொரோனா ஊரடங்கை தியேட்டர்கள் மூடியிருப்பதை உடனே திறக்க வேண்டும் என்றும் தியேட்டரில் டிக்கெட் கட்டண விலையைக் குறைய வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். தற்போது அரசியல் ரீதியாகத் தனது குரலைக் குமரி மாவட்டத்துக்காகக் கொடுத்திருக்கிறார்.குமரியில் படகு போக்குவரத்தைத் தொடங்கி உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் என்று லட்சிய திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் டி. ராஜேந்தர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும் போது, கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது முதல் குமரியில் சிறு தொழில் குறு தொழில் செய்பவர்கள் , நடைபாதை வியாபாரிகள் ஆறு மாதங்களாக தொழில் செய்ய முடியாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த கஷ்டத்தையும் துன்பத்தையும் அனுபவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகளும் கடை வைத்திருப்பவர்களும் கந்து வட்டிக் கொடுமைக்கு ஆளாகிக் கஷ்டப்பட்ட வண்ணம் உள்ளார்கள். இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி சிறந்த சுற்றுலா தலமென்பதால் அதன் மூலம் வரும் வருமானத்தையும் அரசு இழந்து வருகிறது.
ஆகவே துயரத்தின் உச்சத்தில் இருக்கும் நடை பாதை வியாபாரிகளும் சிறு வியாபாரிகளும் சுற்றுலாப் பயணிகளும் சந்தோஷப்படும் விதமாக விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்குப் படகு போக்குவரத்தைத் தொடங்குவதற்குத் தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். கலப்பை மக்கள் இயக்கம் சார்பில், தமிழக முதல்வர் குமரி மாவட்டம் வரும் போது வியாபாரிகள் அனைவரும் விளக்கேற்றி தங்களுடைய வாழ்விலும் விளக்கேற்றுங்கள் என்று முதல்வரின் கவன ஈர்ப்புக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனப் பிடி. செல்வகுமார் கூறியிருந்தார். அந்த கருத்தையும் ஆதரிக்கிறேன்.
இவ்வாறு லட்சிய திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் டி. ராஜேந்தர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.