வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப்பில் விவசாயத் தொழிலாளர்கள் விடிய, விடிய ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அமிர்தசரஸ் வழியாகச் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் 2 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்களின் மூலம் அரசின் நேரடி கொள்முதல், குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை நிறுத்தப்பட்டு விடும். விவசாயிகள், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமைகளாக மாற வேண்டியிருக்கும் என்று எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் விவசாயிகள் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் இன்று(செப்.25) போராட்டம் நடத்துகின்றனர். இதற்கிடையே பஞ்சாப்பில் அமிர்தசரஸ் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்கள் நேற்று முதல் 3 நாள் ரயில் மறியல் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அமிர்தசரஸ் ரயில் நிலையப் பகுதியில் அவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ள அவர்கள் நேற்றிரவு தண்டவாளங்களிலேயே படுத்துத் தூங்கினர்.
விவசாயிகளின் ரயில் மறியல் காரணமாக அமிர்தசரஸ் வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 13 ரயில்கள் பாதி வழியில் சண்டிகருடன் நிறுத்தப்பட்டுள்ளதாக அம்பாலா ரயில்வே ஸ்டேஷன் டைரக்டர் பி.எஸ்.கில் தெரிவித்தார். இன்று(செப்.25) பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டங்களால் பஸ், ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.