பாதுகாப்பு கொடுக்க வந்த 2 போலீசாரை கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் திருப்பி அனுப்பி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள பாஜக மாநில தலைவராக இருப்பவர் சுரேந்திரன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த இரு வருடங்களுக்கு முன் சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக கேரளா முழுவதும் நடந்த போராட்டத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இதையடுத்து இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கேரள அரசுக்கு எதிராகவும், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் இவர் தினமும் ஏதாவது குற்றச்சாட்டுகளைக் கூறுவது வழக்கம்.
சமீபத்தில் தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வருக்கும், முதல்வர் குடும்பத்தினருக்கும் தொடர்பு உண்டு என்று சுரேந்திரன் கூறினார்.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டபோது, சுரேந்திரனுக்கு வேறு வேலை கிடையாது, அவரை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டுமோ அப்படி பார்த்துக்கொள்கிறேன் என மிரட்டல் தொனியில் பதிலடி கொடுத்தார். பினராயி விஜயனின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு சில தரப்பிலிருந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவருக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேரள உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை என்று ஏற்கனவே சுரேந்திரன் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று சுரேந்திரனுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக 2 போலீசார் சென்றனர். ஆனால் அவர்கள் இருவரையும் சுரேந்திரன் திருப்பி அனுப்பி வைத்தார். இது குறித்து சுரேந்திரன் கூறுகையில், எனக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனிடமிருந்து மட்டும்தான் மிரட்டல் இருக்கிறது. வேறு யாராலும் எனக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. கேரள மக்கள் எனக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். எனவே போலீஸ் பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்றார்.