கொச்சியில் உள்ள தென் பிராந்திய கடற்படைத் தளத்தில் பணிபுரிந்து வரும் ராணுவ பெண் அதிகாரியை அவரது உயர் அதிகாரியே பலமுறை முறை மிரட்டி பலாத்காரம் செய்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை தளம் உள்ளது. இங்குத் தென் பிராந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் ராணுவ பொறியியல் பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பிரிவில் உள்ள பேரக் மற்றும் ஸ்டோர்ஸ் அதிகாரியாக பணிபுரியும் ஒரு பெண் அதிகாரி கொச்சி துணை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், ராணுவ கண்காணிப்பு பொறியாளரான சார்தோஷ் சந்திரா என்பவர் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொச்சி கடற்படை தளத்திலுள்ள எம் இ எஸ் அலுவலகத்தில் வைத்தும், கட்டாரிபாக் என்ற இடத்தில் வைத்தும் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பலமுறை தன்னை சார்தோஷ் சந்திரா மிரட்டி பலாத்காரம் செய்ததாக அந்த புகாரில் பெண் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். மேலும் சக ஊழியர்கள் முன்னிலையில் தன்னுடைய ஜாதிப் பெயரைச் சொல்லி அவமானப்படுத்தியதாகவும் அவர் மேலும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ உயரதிகாரி மீதான இந்த பலாத்கார புகாரைக் கொச்சி துணை போலீஸ் கமிஷனர் துறைமுக போலீசுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து ராணுவ அதிகாரி சார்தோஷ் சந்திராவுக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ராணுவ கடற்படை தளத்தில் வைத்து பெண் அதிகாரியை ராணுவ உயரதிகாரியே பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.