பாபர்மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட 32 பேரும் விடுதலை.. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

CBI special court acquitted all 32 accussed including Advani in Babri demolition case.

by எஸ். எம். கணபதி, Sep 30, 2020, 13:03 PM IST

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர்மசூதி இருந்த இடத்தை, ராமர் பிறந்த இடம் என்று இந்து அமைப்புகள் கோரி வந்தன. கடந்த 1992-ம்ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பல்லாயிரக்கணக்கான கரசேவகர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் பாபர்மசூதியை இடித்தனர். அப்போது பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் நேரடியாக அங்கு சென்றிருந்தனர்.


அப்போது, மத்தியில் பிரதமர் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியும், உ.பி.யில் முதல்வர் கல்யாண்சிங் தலைமையில் பாஜக ஆட்சியும் நடைபெற்றது. இரு ஆட்சியினரும் பாபர்மசூதி இடிக்கப்படும் வரை அதை தடுக்க தவறி விட்டனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதை சிபிஐ விசாரித்தது. அத்வானி உள்பட 49 பேர் மீது குற்றம்சாட்டி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பின்னர், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது லக்னோவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. வழக்கில் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 600க்கும் மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அத்வானி, ஜோஷி, உமா பாரதி, கல்யாண்சிங் மற்றும் சதீஷ்பிரதான், மகந்த் நித்யகோபால் தாஸ் ஆகியோரைத் தவிர மற்ற 26 கைதிகள் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அத்வானி உள்பட 6 பேரும் வீடியோ கான்பரன்சில் ஆஜாகினர்.


இதைத் தொடர்ந்து, நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் தீர்ப்பை வாசித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் சதியில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை என்று கூறி, அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடந்ததல்ல. இடிக்க வேண்டும் என்ற சதித்திட்டத்தில் அத்வானி உள்பட யாரும் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யுமா என்பது குறித்து தெரியவில்லை.
முன்னதாக, லக்னோவில் சிறப்பு நீதிமன்றம் அமைந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதே போல், தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டிருந்தன.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>



அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை