டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கூட்டு பலாத்காரத்திற்கு இரையான இளம்பெண்ணின் உடல் அவரது பெற்றோருக்கே தெரியாமல் அதிகாலையில் தகனம் செய்யப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. பச்சிளம் சிறுமிகளைக் கூட கொடுமையான முறையில் பலாத்காரம் செய்து அவர்களைக் கொடூரமாகத் தாக்கி கொல்லும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. போலீசார் தொடர்ந்து காட்டிவரும் அலட்சியமே இந்த கொடுமையான சம்பவங்கள் அதிகரிப்பதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் புல் பறிக்க தனது தாய் மற்றும் சகோதரனுடன் சென்ற 19 வயதான இளம் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று பலாத்காரம் செய்தது. அதுமட்டுமில்லாமல் அந்த இளம்பெண்ணைக் கொடூரமான முறையில் தாக்கி நாக்கையும் அறுத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த அந்த இளம்பெண் முதலில் அப்பகுதியிலுள்ள மருத்துவமனையிலும், பின்னர் டெல்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த இளம் பெண்ணின் உடலை போலீசார் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ரகசியமாக உத்திரபிரதேசத்திற்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் தகனம் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் கூட தெரிவிக்காமல் போலீசார் ரகசியமாக இளம்பெண்ணின் உடலைத் தகனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்படத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். யாரைக் காப்பாற்றுவதற்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முயற்சிக்கிறார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது மிகவும் அநியாயமான செயல் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.