ஒரு ரூபாய் அபராதம்.. சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் பூஷன் சீராய்வு மனு

by எஸ். எம். கணபதி, Oct 1, 2020, 12:56 PM IST

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வுமனு தாக்கல் செய்திருக்கிறார்.
சமூக ஆர்வலரும், ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளருமான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கடந்த ஜூன் 27ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தாத நிலையிலும் ஜனநாயகம் எப்படி அழிக்கப்பட்டது என்பதையும், அதில் நீதிமன்றங்களும் எப்படி பங்கு பெற்றன என்பதையும், குறிப்பாக கடைசியாக பதவி வகித்த 4 தலைமை நீதிபதிகளின் பங்கு என்ன என்பதை பற்றியும் பிற்காலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள் என்று கூறியிருந்தார்.


அதே போல், ஜூலை 29ம் தேதி போட்ட ட்விட்டில், ஊரடங்கால் நீதிமன்றங்கள் மூடப்பட்டு மக்கள் நீதி பெற முடியாமல் தவிக்கும் நேரத்தில், பாஜக பிரமுகர் ஒருவரின் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மோட்டார் பைக்கில் தலைமை நீதிபதி பாப்டே, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் என்று கூறியிருந்தார்.இந்த 2 பதிவுகளுக்காக பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து, அவருக்கு ஜூலை 22ம் தேதியன்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அவமதிப்பு வழக்கில் பூஷனுக்காக பிரபல வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதாடினார். அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதாடினார். இறுதியில், பிரசாந்த் பூஷன் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்பதற்காக நீதிபதிகள் 2 முறை கால அவகாசம் அளித்தனர். ஆனால், அவரோ தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று கூறி, தனது விமர்சனம் அப்படியே நீடிப்பதாக கூறினார்.


இதையடுத்து, பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை செலுத்த தவறினால், 3 ஆண்டுகளுக்கு அவர் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும். மேலும், 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் ஏராளமான பதிவுகள் வெளியாயின. சில ஆங்கிலப் பத்திரிகைகளும் சுப்ரீம் கோர்ட்டின் சமீப கால தீர்ப்புகளை விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்டன. இந்நிலையில், பிரசாந்த் பூஷன் ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தவில்லை. மேலும், அந்த தீர்ப்பை எதிர்த்து மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று(அக்.1) சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த சீராய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கின் முடிவு எப்படியிருந்தாலும் அது நிச்சயமாக முன்மாதிரியாக அமைய வாய்ப்புள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More India News

அதிகம் படித்தவை