ஹீரோக்களாக நடிப்பவர்கள் ஒரு கால கட்டத்துக்கு பிறகு வில்லன் வேடத்துக்கு சம்மதிக்கிறார்கள். விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்து வந்தாலும் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார். இப்படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.
மணிரத்னம் இயக்கிய தளபதி, ரோஜா உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த அரவிந்த் சாமி ஒரு கால கட்டத்துக்கு பிறகு ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்து போகன் படத்தில் வில்லன் வேடம் ஏற்றார். அதேபோல் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த மாதவன் இன்னமும் தனது ஹீரோ இமேஜை தக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக மாதவன் நடிப்பதாக தகவல் வெளியானது. அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுந்தபுரமுலோ படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்துக்கு பிறகு அல்லு அர்ஜூன் புஷ்பா படத்தில் நடிக்கிறார். ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இப்படம் தமிழ் தெலுங்கில் உருவாகிறது. பிரபல இயக்குனர் சுகுமார் இயக்குகிறார்.
புஷ்பா படத்தில் அல்லுவுக்கு வில்லனாக மதவன் நடிப்பதாக கிசுகிசுவாக வெளியான தகவல்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. மாதவன் வில்லன் வேடத்தில் நடிப்பது உண்மையா என்று கேட்ட வண்ணம் இருக்கின்றனர். இப்படியொரு விஷயம் நடந்ததா என்று மாதவனுக்கே தெரியாத நிலையில் அவரது காதுக்கு கிசுகிசு விஷயம் சென்றது. உடனே மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தில் வில்லனாக நான் நடிப்பதாக வரும் தகவல் உண்மையல்ல என்றார்.
மாதவன், அனுஷ்கா நடித்துள்ள சைலண்ட் படம் ஒடிடியில் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. அடுத்து மாதவன் தானே சொந்தமாக தயாரித்து இயக்கும் "ராக்கெட்டரி : தி நம்பி எபெக்ட்" படத்தில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது.