இந்தியாவில் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்களை மோடி அரசு கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டிஷ் எம்.பி.க்கள் உள்பட அந்நாட்டுப் பிரபலங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பாக, தி வயர் ஆங்கில இணையதளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பிரிட்டனில் தொழிலாளர் கட்சி எம்.பி. ஜெரிமி கோர்பின், ஜான் மெக்டனல், ஸ்காட்லாந்து தேசியக் கட்சி எம்.பி. பிலிப்பா விட்போர்டு, சினிமா தயாரிப்பாளர் கென்லோச், எழுத்தாளர் ஹரிகுன்ஷுரு, நடிகை மார்ட்டினா லைர்டு, பத்திரிகையாளர் ஆஷ் சர்க்கார் மற்றும் கல்வியாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், இந்தியாவில் சமீப காலமாக ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை மோடி அரசு கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அதிலும் உபா சட்டத்தில் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மேலும், ஆளுங்கட்சியினர் வெறுப்பூட்டும் வகையில் பேசுகிறார்கள். உலக அளவில் இந்தியாவின் நற்பெயர் இது வரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளது.
கோவிட் 19 தொற்று காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன்களைக் காக்கத் தவறிய மோடி அரசு, இப்படி சமூக ஆர்வலர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. இதற்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.