நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உத்திரபிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம் பெண்ணின் வீடியோவை பாஜக ஐடி பிரிவு தலைவர் மாளவியா வெளியிட்டுள்ளது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் 19 வயது இளம்பெண் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், மாநில போலீசும் தவறுக்கு மேல் தவறுகளை செய்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இளம்பெண்ணின் வீட்டினரை வெளியே விடாமல் போலீஸ் தடுப்புக் காவலில் வைத்துள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் 2 நாட்களாக போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு கடைசியில் நேற்று அந்த இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது போலீசாருக்கு எதிராகவும், மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு எதிராகவும் இளம்பெண்ணின் உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினர். தங்களது மகளின் உடலை போலீசார் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல பாஜகவின் ஐ டி பிரிவு தலைவரான அமித் மாளவியா, அந்த இளம்பெண்ணின் ஒரு வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
48 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஒரு நிருபருடன், கொல்லப்பட்ட அந்த இளம்பெண் பேசும் காட்சிகள் உள்ளன. அதில், தன்னை கழுத்தை நெரித்துக் கொல்ல சிலர் முயற்சிக்கின்றனர் என்று மட்டுமே அந்த இளம்பெண் கூறுவதாக மாளவியா ட்வீட் செய்துள்ளார். பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் போட்டோவோ, வீடியோவோ, பெயரோ குறிப்பிடக் கூடாது என்பது சட்டமாகும். இதை மீறி பாஜக தலைவர் மாளவியா அந்த இளம்பெண்ணின் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. இளம்பெண்ணின் வீடியோவை வெளியிட்டது சட்டத்தை மீறிய செயலாகும் என்றும், பாஜக தலைவர் மாளவியா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உபி மகளிர் ஆணைய தலைவி விம்லா பாத்தம் விவாதம் கூறியுள்ளார்.