திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரையிலான பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்து 4 ஆண்டுகள் கடந்து பணிகள் எதுவுமே நடக்காதது இரு மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி - தென்காசி இடையே உள்ள நெடுஞ்சாலை தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சாலையை அகலப்படுத்துவதற்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.ஓராண்டுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு, ஆரம்பகட்ட பணிகள் தொடங்கின. பழைய பேட்டை முதல் தென்காசி வரை சாலையோரங்களில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பச்சை மரங்கள் அவசரம் அவசரமாக வெட்டி அகற்றப்பட்டன.
இந்நிலையில், மறு மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதனால் பணிகள் துவங்க படாமலேயே திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.இந்தப் பணிக்காக மறு டெண்டர் கோரப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அடிப்படை பணிகள் கூட நடைபெறாமல் உள்ளது கடந்த 2013-14ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த சாலை பணி குறித்த அறிவிப்பு முதல்வரால் அறிவிக்கப்பட்டது. 19.9.2014 அன்று இதற்காக ரூ.480.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் (2) மூலம் பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூம் உலக வங்கியின் கடனுதவியுடன் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கி தென்காசி வரை 45.60 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் சாலையின் அகலம் 24 மீட்டர் முதல் 35 மீட்டர் வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலையில் பாவூர்சத்திரத்தில் ஒரு கிலோ மீட்டர் மதூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. ஒப்பந்ததாரர்கள் தேவையான தகுதியை அடையாத காரணத்தால் மறு ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. இரண்டாம் முறையாக கடந்த 20.11.2019-ல் ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒப்பந்தப்புள்ளி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் சாலை பணி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.