கேரளாவில் பண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெண் டாக்டர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கூட்டநெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சோனா (30). பல் டாக்டரான இவர், அப்பகுதியில் டென்டல் கிளினிக் நடத்தி வந்தார். கடந்த 6 வருடங்களுக்கு முன் டாக்டர் சோனாவுக்கு திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில வருடங்களிலேயே இவர் கணவனை விட்டுப் பிரிந்து விட்டார். இதன் பிறகு சோனா பெற்றோருடன் வசித்து வந்தார்.
பிரசித்தி பெற்ற டென்டல் கிளினிக் என்பதால் சோனாவின் கிளினிக்கில் எப்போதும் நோயாளிகள் கூட்டம் அலைமோதும். இதையடுத்து தனது கிளினிக்கை விரிவுபடுத்த சோனா முடிவு செய்தார். இந்த பணிகளுக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவருடன் சோனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்கள் இருவரும் நெருக்கமானார்கள். இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ முடிவு செய்தனர். திருச்சூரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்தனர். இந்த குடியிருப்பை சோனா தான் வாங்கினார்.
இந்நிலையில் சோனாவிடமிருந்து மகேஷ் அடிக்கடி பணம் கடன் வாங்கி வந்தார். 22 லட்சம் வரை அவர் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதை சோனா திருப்பிக் கேட்டார். இது தொடர்பாக அவர்களிடையே இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சோனாவின் கிளினிக்குக்கு தனது நண்பர்களுடன் வந்த மகேஷ், அவருடன் தகராறில் ஈடுபட்டார் அப்போது சோனாவின் உறவினர்களும் அங்கு இருந்தனர்.
திடீரென சோனாவை அனைவரின் கண்ணெதிரே மகேஷ் கத்தியால் சரமாரி குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சோனா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மகேஷை கைது செய்தனர்.