கொரோனா காரணமாக தொழில் நலிவடைந்து கடனை திருப்பிக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, தான் கடன் வாங்கிய வங்கிகளிலேயே துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் நலிந்து விட்டன. வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் திருப்பி கட்ட முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவில் வியாபாரம் நலிவடைந்ததால் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாத ஒரு வியாபாரி, அவர் கடன் வாங்கிய வங்கிகளிலேயே துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி புவனேஸ்வரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு வாலிபர் துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டி 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 28ம் தேதி மஞ்சேஷ்வர் என்ற இடத்திலுள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையிலும் அதே பாணியில் துப்பாக்கி முனையில் 4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 2 கொள்ளைகளையும் நடத்தியது ஒரே ஆள் தான் என தெரியவந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் துணி வியாபாரியான சவும்யரஞ்சன் ஜனா (25) என்பவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், கொரோனா காரணமாக தனது தொழில் நலிவடைந்ததால் வேறு வழியின்றி வங்கிகளில் கொள்ளை அடித்ததாக கூறினார். அந்த வங்கிகளில் அவர் 19 லட்சம் கடன் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்கு பின் அவரை சிறையில் அடைத்தனர்.