கொரோனா காரணமாக ஏற்பட்ட பண நெருக்கடியால் குழந்தை பிறப்பை தள்ளிப்போட வேண்டாம் என்றும், குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 2018ல் சிங்கப்பூரின் மக்கள் தொகை கடந்த 8 வருடத்தில் மிக குறைவாக இருந்தது. இதையடுத்து மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை சிங்கப்பூர் அரசு அறிவித்தது. இதன்படி 'பேபி போனஸ்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. குழந்தை பெற தயாராகும் தம்பதிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் வரை பணம் கிடைக்கும்.
இந்நிலையில் எதிர்பாராமல் வந்த கொரோனா காரணமாக சிங்கப்பூரில் பெரும்பாலானோர் கடும் பண நெருக்கடியில் சிக்கி விட்டனர். இதையடுத்து பல புதுமண தம்பதியினர் குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டுள்ளனர். கர்ப்பிணியானால் பிரசவத்திற்கு கூட பணம் இல்லாத நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பண நெருக்கடி காரணமாக குழந்தை பிறப்பை தள்ளிப்போட முடிவு செய்துள்ள தம்பதிகளுக்கு நிதி உதவி அளிக்க சிங்கப்பூர் அரசு முன்வந்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீத் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கூறியது: கொரோனாவால் நம் நாட்டில் ஏராளமானோர் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். பண நெருக்கடி காரணமாக பல தம்பதிகள் தங்கள் குழந்தைக்கான காத்திருப்பை நீட்டி வைத்துள்ளதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற தம்பதியருக்கு உதவ அரசு முன்வந்துள்ளது. குழந்தை பெற விரும்பும் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும் வரை உள்ள செலவை ஒரே தவணையில் வழங்க அரசு தீர்மானித்துள்ளது இது குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.