நேற்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் கேரளா மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்தது. நேற்று ஒரே நாளில் 11,755 பேருக்கு நோய் பரவியது.
கொரோனா பரவலின் தொடக்க கட்டத்தில் மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உட்பட மாநிலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்த போது கேரளாவில் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடந்த இரு மாதங்களாக நோயாளிகள் எண்ணிக்கை கேரளாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் முதன்முதலாக கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது. நேற்று இதில் கேரளா புதிய உச்சத்தை தொட்டது.
நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1,632 பேருக்கு நோய் பரவியது. இது தவிர கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், கொல்லம் என மொத்தம் 6 மாவட்டங்களில் நேற்று நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. கொரோனா பரவலின் தொடக்க கட்டம் முதல் நேற்று முன்தினம் வரை மகாராஷ்டிரா மாநிலம் தான் நோயாளிகள் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்தது.
ஆனால் நேற்று மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளிவிட்டு கேரளா முதலிடத்தை பிடித்தது. நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாத நிலையும், சிகிச்சைக்கான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் தோன்றியுள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்கும் படியும், பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிவது, கைகளை கழுவுவது போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நோயாளிகள் எண்ணிக்கை கூடி வருகின்றபோதிலும், மரண எண்ணிக்கை கேரளாவில் சற்று குறைவு என்பது ஆறுதலான விஷயமாகும். நேற்று 23 பேர் கொரோனா பாதித்து மரணமடைந்தனர். இதுவரை கேரளாவில் 978 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று மகாராஷ்டிராவில் 308 பேரும், கர்நாடகாவில் 102 பேரும், தமிழ்நாட்டில் 67 பேரும் மரணமடைந்தனர்.