பாட்னா ரயில் நிலையத்தில் 18 கிலோ தங்கம் கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் தூதரகத்திற்கு வந்த பார்சல் மூலம் 30 கிலோ தங்கம் அனுப்பி வைக்கப்பட்ட விவகாரத்தினை தொடர்ந்து தங்க கடத்தல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் அமலாக்க துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், பீகாரின் பாட்னா ரெயில்வே நிலையத்தில் மர்ம நபர் ஒருவரிடமிருந்து 18 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்நபரிடம் இருந்து 18.39 கிலோ தங்கம் மற்றும் ரூ.2.30 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. நகை பணம் வைத்துக் கொள்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இந்த விவகாரம் பற்றி வருமான வரி துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் தங்கம கடத்தல் விவகாரத்திற்கும் பாட்னாவில் இப்படிப்பட்ட நபருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இத்தனை கிலோ தங்கம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.